காவிரியின் கடைமடை, அழகிய வயல்வெளி, தாழ் வாரமும் முற்றமும், அறைகள் நிறைந்த பெரிய ஓட்டு வீடு, அதில் ஊஞ்சல், பத்தாயம், நெல் கோட்டை, வாசலில் திண்ணை, பத்து அடி ஓடி குதித்தால் பெரிய குளம், குளக்கரையில் தென்னையும், பூசனை, கிளி மரம், குளத்தில் சாய்ந்து ஆடும் மாமரம், நாங்கள் ஏறி குளத்தில் குதிக்க மகிழ்ச்சியாக இடம் கொடுத்து பழம் கொடுக்கும், வீட்டின் முன்புறம் பூ தோட்டம், வலது புறம் ஒரு வீடு, வீட்டில் நம் நண்பர்கள், வீட்டை தாண்டி வாய்க்கால், வாய்க்கால் வந்து சேரும் குளம், குளத்தில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால், வாய்க்கால் தாண்டி வயல், வாய்க்கால் ஓரம் பனை மரம், சிறிது தூரத்தில் ஒன்றிரண்டு ஈச்ச மரம், வீட்டின் பின்புறம் வாழை, கீரை, எலுமிச்சை, பெரிய புளிய மரம்,
பின்னால் இருக்கும் அடுப்பறையில் சமையல், நொங்கும், இளநீர் வெட்டி குடிப்பது, மாவு அரைக்க குடக்கல், அம்மி, பின்புறம் வயல்வெளி, அதை தாண்டி வாய்க்கால், வாய்க்கால் இருபுறமும் பனை, மூங்கில் குத்து, வாய்க்கால் தாண்டி பெரிய வயல்வெளி, வீட்டின் இடபுறம் வண்டி கொட்டகை, பாரவண்டி, கூண்டு வண்டி நிற்கும் அங்கே, அதனருகே எருமை மாடு கட்டி அசை போடும், அதன் பின்னே சாணம் குழி அது இறங்கும் வரப்பில், எருமை தாண்டி மாட்டு கொட்டில், அதை தாண்டி வைக்கல் போர், அதை சுற்றி மரங்கள், மாடுகள் இளைப்பாறிய இடமே, இரண்டு வண்டி சோடு பாதை போகும், இரண்டும் சேர்ந்து ரோடு போகும், குளத்தின் பக்கத்தில் பெருமாள் கோயில், அதனருகே குலதெய்வம், அதனருகே களம், அதை தொடர்ந்து வீதிகள் மற்றும் நம் சொந்த பந்த நட்பு களின் வீடுகள், மரங்கள் செடிகள், கொடிகள், கரி கோடு, பிள்ளையார் பந்து, கிட்டிபுல்,பனை வண்டி, பனை காத்தாடி, சில்லு விளையாட்டு, ஈச்சம் பழம், நொங்கு, பதனி, இளநீர் தின்பண்டங்கள், வயல் செல்ல பார வண்டி, ஊர் செல்ல கூண்டு வண்டி, மாட்டு வண்டி ஓட்ட சண்டை நடக்கும், மாட்டுக்கு புண்ணாக்கு, ஆட்டுக்கு கருவக்காய் கொடுத்து அதன் மனதில் இடம் பிடிப்போம், புண்ணாக்கு திருடன் தேடி மாமா அலைவர், குளத்தில் குதித்தால் நேரம் தெரியாது, ஆற்றில் ஆட நேரம் போதாது, களைத்து போய் கயிற்று கட்டிலில் நாங்கள் தூங்க, காலை நேரம் பொழுது விடிந்து சூரியன் தெரியும் குளத்தில்
No comments:
Post a Comment